சென்னை: சென்னை மடிப்பாக்கம் திமுக வட்டச் செயலாளர் செல்வம் கொலை வழக்கு, அதிமுக பிரமுகர் பார்த்திபன் கொலை வழக்கு உள்ளிட்ட முக்கிய கொலை வழக்குகளில் மூளையாகவும், கூலிப்படைத் தலைவனாகவும் செயல்பட்டவர், முத்து சரவணன். இதனையடுத்து, அதிமுக பிரமுகர் பார்த்திபன் கொலை வழக்கில் சோழவரம் போலீசார் தனிப்படை அமைத்து முத்து சரவணனை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று தனிப்படை போலீசார் முத்து சரவணன் மற்றும் அவரது கூட்டாளி நாயர் சதிஷ் ஆகியோரை டெல்லியில் வைத்து கைது செய்துள்ளனர். இந்த நிலையில், இருவரையும் சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில், சென்னை சோழவரம் அருகே பூதூர் பகுதியில் இரண்டு ரவுடிகளும் போலீசார் பிடியில் இருந்து தப்பிக்க போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தற்காப்புக்காக இரண்டு ரவுடிகளையும் காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து பிடித்துள்ளனர். போலீசார் துப்பாக்கியால் சுட்டதில், முத்து சரவணன் மற்றும் நாயர் சதீஷ் ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இரண்டு ரவுடிகளும் தாக்குதல் நடத்தியதில் மூன்று போலீசார் காயம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. முத்து சரவணன் கூலிப்படையை வைத்து பணத்தைப் பெற்றும், வில்லிவாக்கம் ராஜேஷ் அதிமுக பிரமுகர் பார்த்திபன் உள்ளிட்ட கொலை வழக்கில் மூளையாக செயல்பட்டதும், இவர்கள் இருவர் மீதும் 20க்கும் மேற்பட்ட கொலை, கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில், இவர்கள் இருவரின் கூட்டாளியாக கருதப்படும் தணிகா என்ற ரவுடியை செங்கல்பட்டு போலீசாரால் இன்று காலை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்துள்ளனர். இதில் தணிகா என்ற ரவுடிக்கு கை, கால்களில் காயம் அடைந்து, தற்போது சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இவர்கள் மூவரும் கூட்டாளியாக இருந்து கொண்டு மடிப்பாக்கம் திமுக மாவட்டச் செயலாளர் செல்வம் கொலை வழக்கு, அதிமுக பிரமுகர் பார்த்திபன் கொலை வழக்கை ஒன்றாக அரங்கேற்றியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், ரவுடிகள் தாக்குதலில் காயம் அடைந்த மூன்று காவலர்களையும் மருத்துவமனைக்கு நேரடியாகச் சென்று, ஆவடி காவல் ஆணையர் சங்கர் நலம் விசாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: வாத்து மேய்ந்ததில் தகராறு.. இளைஞரை வெட்டிக் கொன்ற முதியவர் கைது!