சென்னை: மத்திய- மாநில அரசுப் பணியில் சேரும் நபர்களின் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை அறிவதற்கு அந்தந்த மாநில தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கப்படும். இந்திய முழுவதும் தபால் துறை சார்பில் கிராம அஞ்சலக ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர். இதற்கு மத்திய பணியாளர் தேர்வாணையம் சார்பில், இதற்கு ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
இந்தநிலையில், கர்நாடகாவில் மாநிலத்தில் உள்ள தமிழ்நாட்டின் எல்லை பகுதிகளில் இந்த பணியிடங்களில் தமிழ் தெரிந்த, தமிழ் படித்தவர்கள் மட்டுமே சேர்க்கப்படுகின்றனர். இதனிடையே, கர்நாடகாவில் பணிக்கு சேர்ந்தவர்களில் 20 பேர் போலி மதிப்பெண் சான்றிதழ்களைக் கொடுத்துள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர்.
அவர்களில் 2 பேரை பெங்களூரூ அம்ருதஹள்ளி காவல் ஆய்வாளர் கைது செய்தார். இதனிடையே கைது செய்த இருவரையும் கர்நாடக காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவதற்காக தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறையில் விசாரணை செய்து அறிக்கை பெற்றுச் சென்றுள்ளனர். இதனிடையே, இன்று அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், போலி மதிப்பெண்கள் அளித்து பணியில் சேர்ந்தவர்கள் மீது காவல்துறையின் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறை அறிவுரை வழங்கி உள்ளது. போலி சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்தவர்களைப் பணி நீக்கம் செய்யவும் அந்தத்துறைகளுக்கு அறிவுரை வழங்கி உள்ளது.
இந்தப் போலி சான்றிதழில் மாநில மாெழியை முதல் மொழியாகப் பதிவு செய்து அளித்துள்ளனர். அரசுத் தேர்வுத்துறையின் பெயர் தவறாக அச்சிடப்பட்டுள்ளது. மேலும், கியூஆர் கோடு மூலம் ஸ்கேன் செய்யும் போது வரும் அவர்களின் விபரங்கள் அடங்கிய தகவல் தெரியவில்லை உள்ளிட்ட பல்வேறு தவறுகள் எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் மதிப்பெண் சான்றிதழ் போலியாக அச்சிடப்பட்டுள்ளது.
போலி மதிப்பெண் சான்றிதழ்களை அச்சிட்டு வட மாநில இளைஞர்களுக்கு வழங்கியவர்களைப் பிடிக்கும் பணியில் கர்நாடக காவல்துறை தீவிரம் காட்டி வருகின்றனர்.
மேலும், தமிழ்நாட்டின் அஞ்சல் துறையில் பணிக்குச் சேர்ந்தவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட போது 300க்கும் மேற்பட்டவர்கள் சான்றிதழ் போலி எனத் தெரியவந்தது உள்ளது. அதேபோல் போலி மதிப்பெண் சான்றிதழ் கொடுத்து சிபிசிஎல், இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளிட்ட மத்திய அரசின் நிறுவனங்களில் பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.