சென்னை: வியாசர்பாடி மல்லிகைப்பூ காலனி பகுதியைச் சேர்ந்தவர் வடமலை (32). இவர் அதே பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவருகிறார்.
இவர் கடந்த 17ஆம் தேதி இரவு பணியை முடித்துவிட்டு சத்தியமூர்த்தி நகர் வழியாகச் செல்லும்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத இரண்டு பேர் துப்பாக்கியை காண்பித்து 1000 ரூபாயை பறித்துச் சென்றனர்.
மேலும் அவ்வழியாக வந்த சிலரைத் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியும் வந்தனர். இது குறித்து உடனடியாகப் பாதிக்கப்பட்டவர்கள் எம்.கே.பி. நகர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அத்தகவலின்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து வியாசர்பாடி குட்செட் பகுதியில் பதுங்கியிருந்த இருவரையும் கைதுசெய்தனர். விசாரணையில் அவர்கள் வியாசர்பாடியைச் சேர்ந்த நிர்மல் குமார் (27), சந்தோஷ் குமார் (27) என்பது தெரியவந்தது. மேலும் இவர்கள் கஞ்சா போதையில் தங்களிடமிருந்த ஹேர் பிஸ்டல் எனப்படும் போலி துப்பாக்கியை வைத்து வழிப்பறியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர்.
இதன் அடிப்படையில் காவல் துறையினர் துப்பாக்கியைப் பறிமுதல்செய்து, அவர்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சா, 1000 ரூபாய் பணம் உள்ளிட்ட பொருள்களைப் பறிமுதல்செய்தனர். மேலும் இருவரையும் கைதுசெய்து வழக்குப்பதிந்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: காரும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து: ஐவர் பலி, மூவர் படுகாயம்!