சென்னை சோழிங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சதீஷ் குமார் (30) - புவனேஸ்வரி (26) தம்பதி. இவர்கள் கடந்த மார்ச் மாதம் 3ஆம் தேதி தனது உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பினர்.
அப்போது இவர்களைப் பின்தொடர்ந்த இருவர் புவனேஸ்வரியின் கழுத்தில் அணிந்திருந்த 5.5 சவரன் தங்க நகையைப் பறித்துத் தப்பிச் சென்றனர். இச்சம்பவம் குறித்து அருகிலுள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புவனேஸ்வரி புகார் அளித்தார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் தனிப்படை அமைத்து செயின் பறிப்பில் ஈடுபட்டவர்களைக் காவல் துறையினர் தீவிரமாகத் தேடிவந்தனர். தொடர்ந்து சாலையில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது, சென்னை தி.நகரைச் சேர்ந்த விக்னேஷ் (28), சந்தோஷ் குமார் (20) ஆகியோர் செயின் பறிப்புச் சம்பவத்தில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து தலைமறைவாக இருந்த இருவரையும் தனிப்படை காவல் துறையினர் கைதுசெய்து செம்மஞ்சேரி காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் விக்னேஷ் மீது ஏற்கனவே திருட்டு, செயின் பறிப்பு போன்ற குற்ற வழக்குகளும், சந்தோஷ் குமார் மீது பைக் திருட்டு போன்ற குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.
மேலும் அவர்களிடமிருந்து 5.5 சவரன் தங்க செயினை பறிமுதல்செய்த செம்மஞ்சேரி காவல் துறையினர், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: யாருமில்லா வீட்டில் பூட்டை உடைத்து திருட்டு... போலீஸ் வலை வீச்சு