கரோனா வைரஸ் எதிரொலியால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசியக் கடைகளைத் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. டாஸ்மாக் மூடியுள்ளதால் ஆங்காங்கே திருட்டுத் தனமாக மது விற்பனையும் நடைபெற்றுவருகிறது.
கடந்த 30 ஆம் தேதி, சாலிகிராமம் மாநகராட்சி திருமண மண்டபம் எதிரே சாலிகிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (35), அருண் (18) ஆகியோர் இணைந்து கள்ளத்தனமாக மதுபான பாட்டில்களை விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அச்சமயத்தில் அங்கு வந்த விருகம்பாக்கம் அதிமுக பாசறை செயலாளர் எஸ்.பி குமார்,ராஜா,கார்த்திக் ஆகியோர் மதுபாட்டில் விற்பனை செய்வது குறித்து காவல் துறையிடம் புகார் அளிக்கப்போவதாக மிரட்டியுள்ளனர். இதையடுத்து, பாலகிருஷ்ணன் வைத்திருந்த ரூ. 17 ஆயிரம் பணத்தையும், 6 மதுபாட்டில்களையும் அவர்கள் பறித்துச் சென்றுள்ளனர்.
இந்நிலையில், நேற்று இரவு பாலகிருஷ்ணன், அருண் ஆகியோர் குடித்துவிட்டு தசரதபுரம் மெயின் ரோட்டில் உள்ள எஸ்.பி குமார் வீட்டிற்குச் சென்று பணத்தை கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த விருகம்பாக்கம் காவல் துறையினர், பாலகிருஷ்ணன், அருண் ஆகியோரைப் பிடித்துச் சென்றுள்ளனர்.
அப்போது, காவல்துறையினரின் கார் கண்ணாடியை அதில் இருந்த நபர் ஒருவர் உடைத்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: சட்டவிரோத மது விற்பனை - 8 பேர் கைது,1400 மது பாட்டில்கள் பறிமுதல்!