சென்னை: சென்னை புழல் சிறையில் விசாரணை, தண்டனை மற்றும் பெண்கள் சிறையில் 2000-க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் உள்ளனர். மேலும், புழல் மத்திய சிறையில் உள்ள பெண் கைதிகள் பிரிவில் மட்டும் வெளிநாட்டுப் பெண் கைதிகள் உட்பட 200க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர்.
இந்த நிலையில், புத்தாண்டு தினத்தன்று பெண் கைதிகள் பிரிவில் இருக்கும் நைஜீரியா நாட்டைச் சேர்ந்த 2 பெண் கைதிகள், தங்களுடைய நாட்டிலுள்ள உறவினர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்க வேண்டும் எனவும், அதற்கு செல்போன் வழங்க வேண்டும் என கேட்டதற்கு சிறைத்துறை சார்பில் எந்த அனுமதியும் வழங்கவில்லை என மறுக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அப்போது ஆத்திரமடைந்த 2 நைஜீரிய பெண் கைதிகளும் புழல் பெண்கள் சிறை உதவி அலுவலர்கள் சுதா, தாரணி, முதன்மை தலைமைக் காவலர்கள் பானுப்ரியா, விஜய்ந்தினி, சாவித்திரி மற்றும் சிறைக் காவலர் வெண்ணிலா ஆகியோரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படுகிறது.
இது மட்டும் அல்லாது, அருகில் இருந்த பொருட்களை எடுத்து 6 பேர் மீதும் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இதில், சாவித்திரிக்குக் கண்ணில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சிறைத்துறை தரப்பில் புழல் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து, அந்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும், புழல் பெண்கள் சிறையில், இரண்டு நைஜீரிய பெண் கைதிகள் சிறைக்காவலர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பிற சிறை கைதிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முன்னாள் அமைச்சர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: நேரில் ஆஜராகாததால் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு..