சென்னை: சூளைமேடு கில்நகர் 2ஆவது தெருவில் வசித்துவந்தவர் பழனிக்குமார். ஓய்வுபெற்ற அரசுப்பள்ளி ஆசிரியராக பழனிக்குமார், ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுவந்தார்.
இந்நிலையில் சென்ற 10ஆம் தேதி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (30), பழனிக்குமார் வீட்டின் முன்னர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
பணத்தைத் தராமல் ஏமாற்றியதால் தற்கொலை
மின்சார வாரியத்தில் உதவி செயற்பொறியாளர் பணி வாங்கித் தருவதாகக் கூறி பாலகிருஷ்ணனிடம் ரூ. 23 லட்சத்தை பழனிக்குமார் பெற்றதாகக் கூறப்படுகிறது. கூறியபடி வேலை வாங்கித் தராமல் ஏமாற்றப்பட்டதால், கொடுத்த பணத்தை பழனிக்குமார் திரும்பக் கேட்டுள்ளார்.
பின்னர் கொடுத்த பணத்தில் ரூ.13 லட்சத்தை மட்டும் பழனிக்குமார் திரும்பப் பெற்றிருக்கிறார். இருப்பினும் மீதத் தொகையான ரூ. 10 லட்சத்தைத் திருப்பித் தராமல் பழனிக்குமார் ஏமாற்றிவந்துள்ளார். இதனையடுத்தே பழனிக்குமார் வீட்டின் முன்னர் பாலகிருஷ்ணன் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டது விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் பண மோசடி, தற்கொலைக்குத் தூண்டுதல் ஆகிய பிரிவுகளின்கீழ் பழனிக்குமார் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
தலைமைச் செயலக ஊழியர் உள்பட இருவர் கைது
இந்நிலையில் தற்போது இதில் தொடர்புடைய தேனியைச் சேர்ந்த செல்வக்குமார், தலைமறைவாக இருந்த தலைமைச் செயலக ஊழியர் பரமசிவம் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தலைமைச் செயலக ஊழியரான பரமசிவம் மூலமாகவே, வேலை வாங்கித் தருவதாகப் பண மோசடி அரங்கேறியது விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி பாலியல் வழக்கு: குற்றவாளிகளிடம் குற்றப்பத்திரிகை நகல்