சென்னை: சென்னையைத் தலைமையிடமாகக் கொண்ட ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி முதலீட்டாளர்களிடம் இருந்து 2 ஆயிரத்து 400 கோடி ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த மோசடி தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்த நிலையில், நிறுவனத்தின் இயக்குநர் மைக்கேல் ராஜ், பாஜக நிர்வாகி ஹரிஷ் உள்பட 11 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், முக்கிய உரிமையாளர்கள் சிலர் துபாயில் பதுங்கி இருப்பது தெரிய வந்ததை அடுத்து, அவர்களைப் பிடிக்க ரெட் கார்னர் மற்றும் லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கைது செய்யப்பட்ட அனைவரையும் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர், காவலில் எடுத்து விசாரணை நடத்தியதன் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில், பாஜக பிரமுகர் உள்பட பல பேருக்கு சம்மன் அனுப்பி முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஆருத்ரா நிறுவனத்தில் பணியாற்றி வந்த முக்கிய இரு தரகர்களை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ராஜா செந்தாமரை மற்றும் அண்ணா நகரைச் சேர்ந்த சந்திர கண்ணன் ஆகிய இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். பின்னர், இவர்களிடம் நடத்திய விசாரணையில், ராஜா செந்தாமரை என்பவர் இயக்குநரும், பாஜக நிர்வாகியுமான ஹரிஷிடம் கூடுதல் இயக்குநராக செயல்பட்டு வந்ததும், சந்திர கண்ணன் என்பவர், ஆருத்ரா நிறுவனத்தின் விளம்பரம் மற்றும் வெப்சைட் பணிகளை கையாண்டதும் தெரிய வந்துள்ளது.
அதேபோல், தரகர் சந்திர கண்ணன் முதலீட்டாளர்களிடம் இருந்து வசூலித்த பணத்திற்குண்டான ஆவணங்களை காவல் துறையினருக்குக் கிடைக்காமல் இருக்க 90 மூட்டைகளில் ஆவணங்களைக் கட்டி அண்ணா நகர் மேற்கு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து மறைத்து வைத்திருந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து மறைத்து வைத்திருந்த 90 மூட்டைகளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், ராஜா செந்தாமரை மற்றும் சந்திர கண்ணன் ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து 56 கோடி ரூபாய் பெற்று மோசடியில் ஈடுபட்டதும் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து இவர்களுக்குச் சொந்தமான 5 கோடி ரூபாய் மதிப்பிலான வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் முடக்கி உள்ளனர். மேலும், இவர்களுக்குச் சொந்தமான இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர், உரிய விசாரணை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட ராஜா செந்தாமரை மற்றும் சந்திர கண்ணன் ஆகியோரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: 'ஆருத்ரா விவகாரத்தில் என் மீது அவதூறு': கமிஷனர் ஆபிஸில் பாஜக துணைத்தலைவர் புகார்!