சென்னை மயிலாப்பூர் தியாகராஜபுரதத்தில் வசிக்கும் ஆடிட்டர் குரு மூர்த்தி வீட்டில், கடந்த ஜனவரி மாதம் 26ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்க முயன்றுள்ளனர். அப்பொழுது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களைக் கண்டு அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். பின்னர் இதுகுறித்து மயிலாப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், சசிகுமார், ஜனார்த்தனன், பாலு, தமிழ், பிரசாந்த், சக்தி, தீபன், வாசுதேவன் ஆகிய 8 பேரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
பின்னர் 8 பேரையும் கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், டிங்கர் குமார், கண்ணன் ஆகிய இருவரும் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச திட்டம் தீட்டியதாக தெரிவித்தனர். இதனடிப்படையில் தலைமறைவாக இருந்த டிங்கர் குமார், கண்ணன் ஆகிய இருவரையும் மயிலாப்பூர் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று ராயப்பேட்டை தனியார் தங்கும் விடுதியில் தலைமறைவாக இருந்த இருவரையும் மயிலாப்பூர் போலீசார் கைது செய்து, சைதாப்பேட்டை 19ஆவது குற்றவியல் நீதிபதி ஜெய சுதாகர் முன்னிலையில் ஆஜர்படுத்தி, பின்னர் புழல் சிறையிலடைத்தனர்.