சென்னை புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்த அலெக்ஸை (36), ஆட்டோவில் வியாசர்பாடி அசோக் பில்லர் அருகே நேற்று முன்தினம் (நவ.16) இரவு சவாரி செல்வதுபோல ஏறிய இருவர் கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.
பயணிகள் போல ஆட்டோவில் ஏறிய இருவரும் சிறிது தூரம் பயணித்த பின்னர் அலெக்ஸ் கழுத்தில் வைத்து வண்டியை ஓரங்கட்ட வலியுறுத்தியுள்ளனர். அதன் பின்னர் ஆட்டோவிலிருந்த புதிய ஆடைகள், அலெக்ஸிடமிருந்து 1500 ரூபாய் பணம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு தப்பியோடியுள்ளனர்.
அலெக்ஸ், வியாசர்பாடி காவல் நிலையத்தில் இது தொடர்பாக புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த வியாசர்பாடி காவல் துறையினர் ஏற்கனவே இதே போன்று சில வழக்குகளில் தொடர்புடையவர்கள் தான் இதில் ஈடுபட்டு இருக்கக்கூடும் என சந்தேகித்தனர்.
ஆட்டோ ஓட்டுநர் அலெக்ஸிடம் சில பழைய குற்றவாளிகளின் புகைப்படங்களை காட்டி விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதன்படி வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ராகேஷ் (22), கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த அஜய் (20) ஆகியோர்தான் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் என்பது தெரியவந்தது.
![பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/9576838_149_9576838_1605673508294.png)
குற்றஞ்சாட்டப்பட்ட இருவரும் வியாசர்பாடி கூட்ஷெட் தெரு பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் நேற்றிரவு இருவரையும் வியாசர்பாடி காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து கத்தி,பணம்,துணிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
இதையும் படிங்க:கைவரிசை காட்டி வந்த 3 பேர் திருவாரூர் போலீஸாரிடம் சிக்கினர்