சென்னை புறநகா் பகுதிகளில் இன்று (ஜன. 22) காலை 6 மணிக்கு மேல் திடீரென பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. இதையடுத்து சென்னை விமான நிலைய ஓடுபாதை பகுதிகளிலும் அதிகமான பனிமூட்டம் இருந்ததால் சென்னையிலிருந்து விமானங்கள் புறப்படுவதிலும் தரையிரங்குவதிலும் சிரமம் ஏற்பட்டது.
கடுமையான பனிமூட்டம் காரணமாக, மும்பையிலிருந்து 52 பயணிகளுடன் இன்று காலை 8 மணிக்கு சென்னை வந்த ஏா் ஏசியா விமானம், பெங்களூரிலிருந்து 46 பயணிகளுடன் காலை 7.50 மணிக்கு சென்னை வந்த இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் ஆகிய இரண்டு விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்குத் திருப்பி அனுப்பப்பட்டன.
சென்னையில் வானிலை சீரடைந்தப் பின்பு அந்த இரண்டு விமானங்கள் சென்னைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையிலிருந்து மும்பை, டெல்லி, அகமதாபாத், புனே, மும்பை, மதுரை, புவனேஸ்வா், ஹைதராபாத், திருச்சி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட 12 விமானங்கள் சுமாா் 30 நிமிடங்களிலிருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாகப் புறப்பட்டுச் சென்றன.
அதைப்போல் சென்னைக்கு வரவேண்டிய பெங்களூா், நாக்பூா், டெல்லி உள்ளிட்ட நான்கு விமானங்களும் தாமதமாகியுள்ளன. இதனால் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனா்.
இதையும் படிங்க... பனிமூட்டம், புகைமூட்டம் காரணமாக 12 விமானங்கள் தாமதம்