சென்னை: விருகம்பாக்கம் தசரதபுரம் பேருந்து நிறுத்தத்தில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி டிசம்பர் 31ஆம் தேதி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக எம்.பி. கனிமொழி மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த 22 வயதான பெண் காவலர் ஒருவரிடம், அக்கூட்டத்தில் இருந்த இரண்டு திமுக நிர்வாகிகள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவர்கள் எல்லை மீறவே பெண் காவலர் கதறி அழுதுள்ளார். இதனை கண்ட அருகிலிருந்த காவல் ஆய்வாளர் தாம்சன் சேவியர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட இரு திமுக நிர்வாகிகளை கையும் களவுமாக பிடித்தார்.
அவரிடம் நடத்திய விசாரணையில் திமுக 129ஆவது வட்ட இளைஞர் அணியை சேர்ந்த பிரவீன் (23) மற்றும் ஏகாம்பரம் (24) என்பதும் தெரியவந்தது. இவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லும் போது திமுக நிர்வாகிகள் தடுத்து நிறுத்தி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மேலும் எம்எல்ஏ பிரபாகர் ராஜா மற்றும் கவுன்சிலர் ஆகியோர் ஆய்வாளரிடம் பிரச்சனையை பெரிது படுத்த வேண்டாம் என சமரசம் செய்ததால் வழக்கு போடாமல் இருவரையும் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் காவலர் திமுக நிர்வாகிகளின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதற்கிடையே பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
அதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் காவலரிடம் கோயம்பேடு துணை ஆணையர் குமார் விசாரணை நடத்தினார். விசாரணையில் கூட்ட நெரிசலில் தெரியாமல் கைபட்டு விட்டதாகவும், எந்த நோக்கமும் இல்லை என கூறி பெண் காவலரிடம் மன்னிப்பு கேட்டு திமுக நிர்வாகிகள் பெண் காவலரிடம் கடிதம் எழுதி கொடுத்தனர். மன்னிப்பு கடிதத்தை ஏற்ற பெண் காவலர் புகாரை வாபஸ் பெற்றதாக கூறப்பட்டது.
இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்திலுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, திமுக நிர்வாகிகள் பெண் காவலரிடம் அத்துமீறியது உண்மை என தெரியவந்ததால், மீண்டும் பெண் காவலரிடம் புகார் பெறப்பட்டு திமுக நிர்வாகிகளான பிரவீன் மற்றும் ஏகாம்பரம் ஆகிய இருவர் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள திமுக நிர்வாகிகள் பிரவீன் மற்றும் ஏகாம்பரம் ஆகியோரை தற்காலிகமாக கட்சியிலிருந்து நீக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சிசிடிவி காட்சி ; சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சரக்கு வாகனம் திருட்டு..