சென்னை: தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளுக்கு வெளியே போதைப் பொருள்கள் விற்பவர்களை கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுக்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார். அதனடிப்படையில் கடந்த 5 நாள்களாகக் காவல் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சென்னையில் டிரைவ் அக்கைன்ஸ்ட் டிரக்ஸ் ஆப்ரேஷனை மேற்கொண்டு தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (டிசம்பர் 10) அண்ணா நகர் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் துறையினர் கொரட்டூரில் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவரிடம் 2 போதை ஸ்டாம்புகள், 1 கிராம் மெத்தபெட்டமைன் ஆகிய போதைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது. பின்னர் அவர் மணப்பாக்கத்தைச் சேர்ந்த தனுஷ் (23) என்பது தெரியவந்தது. கல்லூரி மாணவர் ஒருவரிடம் போதைப் பொருள்கள் வாங்கியதாக தனுஷ் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கொரட்டூர் வெங்கடராமன் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவரான டேனியல் ஜேக்கப் (21) என்பவரைக் காவல் துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 48 போதை ஸ்டாம்புகள் பறிமுதல் செய்யப்பட்டது.
கல்லூரி மாணவர் டேனியல் ஜேக்கப் சென்னையில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கு போதை ஸ்டாம்புகளை விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையும் படிங்க: மிரட்டும் தொனியில் பேசினால் நடவடிக்கை - எச்சரித்த செந்தில்பாலாஜி