சென்னை: திருவல்லிக்கேணி மாட்டான்குப்பத்தை சேர்ந்தவர் தனலட்சுமி(52). இவரது மகன் குஜராத்தில் இருப்பதால் தனது இருசக்கர வாகனத்தை குஜராத்திற்கு அனுப்புவதற்காக இணையத்தில் ஆகஸ்ட் மாதம் 27ஆம் தேதி சரக்கு அனுப்பும் நிறுவனத்தை தேடியுள்ளார்.
அப்போது தனலட்சுமி fast cargo packers என்ற இருசக்கர வாகன டெலிவரி நிறுவனத்தை கண்டுப்பிடித்தார். மேலும் இணையம் வழியாக ரூ.9,440 செலுத்தி அந்த நிறுவனம் அனுப்பிய நபரிடம் இருசக்கர வாகனத்தையும் ஒப்படைத்துள்ளார்.
இரண்டு மாதங்களாகியும் இருசக்கர வாகனம் குஜராத்திற்கு செல்லாததால் சந்தேகமடைந்த தனலட்சுமி அண்ணா சதுக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் காவல்துறையினர் அந்த நிறுவனத்தை நடத்தி வந்த புழல் பகுதியை சேர்ந்த பிரவீனா(30) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் தனலட்சுமியை போல் பல பேரிடம் வெளி மாநிலத்தில் இருசக்கர வாகனத்தை டெலிவரி செய்வதாக கூறி பணம், இருசக்கர வாகனத்தை பெற்று ஏமாற்றியது தெரியவந்தது.
மேலும் வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட இருசக்கர வாகனத்தை காவாங்கரை பகுதிக்கு கொண்டு வந்து செங்குன்றத்தை சேர்ந்த சஞ்சய் என்பவர் உதவியுடன் சோழவரத்தில் உள்ள குடோனில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து ரவீனா, சஞ்சய் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.மேலும் பதுக்கி வைத்திருந்த 4 இருசக்கர வாகனங்களை மீட்டனர்.
இதையும் படிங்க: கைவிட்ட அதிர்ஷ்டம்.... ஐபில் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் மோசடி செய்த இளைஞர் கைது!