சென்னை: கிண்டி வேளச்சேரி பிரதான சாலை பேருந்து நிலையத்தில், சாலையோரம் தங்கியிருந்த கார்த்தி என்ற நபர்
கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். இதனைக்கண்ட பொதுமக்கள் இது குறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்ற கிண்டி காவல்துறையினர், கார்த்தியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், கார்த்தியுடன் தங்கியிருந்த பெண் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில், அந்த பெண்ணின் பெயர் சந்தியா என்பதும், சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த பால்பாண்டி என்பவரின் மனைவி என்பதும் தெரியவந்தது.
பால்பாண்டி சாலையோரத்தில் வசித்து கொண்டு குப்பைகளை சேகரித்து விற்பனை செய்து பிழைப்பு நடத்தி வருவதாகவும், கடந்த 8 வருடங்களுக்கு முன்பு இவருக்கு சத்தியாவுடன் திருமணமாகி 6 வயது பெண் குழந்தை உட்பட 2 குழந்தைகள் உள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. மேலும் சந்தியாவிற்கு, பால்பாண்டியின் நண்பரான கார்த்திக் என்பவரோடு பழக்கம் ஏற்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக அவருடன் சந்தியா தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் 6 வயது மகளை பால்பாண்டி ஆசிரமத்தில் சேர்த்துள்ளார். தனது மனைவியும் வேறு ஒருவருடன் சென்று விட, தனது மகளையும் பிரிந்ததால் சோகத்தில் ஆழ்ந்த பால்பாண்டி, சந்தியா - கார்த்திக் தங்கி இருக்கும் கிண்டி வேளச்சேரி பிரதான சாலை பேருந்து நிலையத்திற்கு அடிக்கடி சென்று தங்களது 6 வயது மகளின் வாழ்க்கை வீண் ஆவதைக்கூறி தன்னோடு வந்து விடும்படி சண்டையிட்டு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக மனம் இறங்கிய சந்தியா, பால்பாண்டியோடு சேர்ந்துள்ளார். இரண்டு நாட்கள் தங்கியிருந்த நிலையில் மீண்டும் கார்த்தியை தேடிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமுற்ற பால்பாண்டி தனது நண்பரோடு சேர்ந்து கார்திக்கை கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பால்பாண்டி மற்றும் அவரது நண்பர் பாஸ்கரை கிண்டி போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: தாம்பரத்தில் 1,300 கிலோ குட்கா பதுக்கிய மூன்று பேர் கைது