சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தேமுதிக நகர துணைச் செயலாளர் ராஜ்குமார். இவர் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே, இருசக்கர வாகனத்தில் சென்றபோது சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இதனையடுத்து கொலையாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தேமுதிக மாவட்ட செயலாளர் அனகை முருகேசன் தலைமையில் நிர்வாகிகள், உறவினர்கள் சங்கர்நகர் காவல் நிலையத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் சந்தேகத்தின் பேரில் அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த காவல்துறையினர் காட்டன் என்கிற சதீஷ் (28), ரஞ்சித் குமார் (30) ஆகிய இருவரையும் கைது செய்து இந்தக் கொலை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அப்போது இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவலர்கள், நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் அனகாபுத்தூர் பேருந்து நிலையம் அருகே ஆற்று ஓரத்தில் அமைந்துள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தை அப்பகுதியை சேர்ந்த அரசியல்வாதி ஒருவர் அபகரிக்க முயற்சித்தபோது ராஜ்குமார் அதைத் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் அரசியல்வாதியின் தூண்டுதலின் பேரில் இக்கொலை நடைபெற்று இருக்கலாம் என்ற கோணத்திலும் காவலர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: காவலாளி கொலை வழக்கு.. மேலும் 3 பேர் கைது!