சென்னை கோயம்பேடு சின்மயா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப். இவர் சினிமா துறையில் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், நேற்றிரவு கேரளாவில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு மனைவியுடன் சென்னைக்கு திரும்பினார்.
அப்போது, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்தை விட்டு இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்த போது அவரை பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத இருவர், ஜோசப் பாக்கெட்டில் இருந்த செல்ஃபோனை பறித்துச் சென்றனர். இதில் அதிர்ச்சியடைந்த அவர், திருடன் திருடன் என கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து திருடர்களைப் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.