சென்னையில் இருந்து துபாய் செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்படத் தயாராகிக் கொண்டு இருந்தது. அந்த விமானத்தில் பயணிக்க வந்த பயணிகளை,சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்கள் சோதனை நடத்தி, விமானத்திற்கு அனுப்பிக் கொண்டு இருந்தனர்.
அப்போது சென்னையைச்சேர்ந்த சையத் இப்ராஹிம் (30), அக்பர் (26) ஆகிய இரண்டு பயணிகள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் சுற்றுலாப்பயணிகள் விசாவில் துபாய்க்குச் செல்ல வந்திருந்தனர். இவர்களை சுங்க அலுவலர்கள் நிறுத்தி அவர்களுடைய உடைமைகளை சோதனையிட்டனா்.
அதோடு அவர்கள் இருவரையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று முழுமையாக சோதித்த போது, அவர்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த, கட்டுக்கட்டான அமெரிக்க டாலர் மற்றும் யூரோ கரன்சி உள்ளிட்ட வெளிநாட்டுப் பணங்களை கண்டுபிடித்தனர். அத்தோடு இருவரின் கைப்பைகளிலும் இருந்த வெளிநாட்டு பணங்களையும் பறிமுதல் செய்தனா்.
இரண்டு பேரிடம் இருந்தும் ரூபாய் 37.39 லட்சம் மதிப்புடைய வெளிநாட்டுப் பணத்தை சுங்க அலுவலர்கள் பறிமுதல் செய்தனர். இதையடுத்து இரண்டு பேரின் துபாய் பயணத்தையும் ரத்து செய்தனர். இருவரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: சென்னையில் பட்டப்பகலில் நடந்த பயங்கரம்;மக்கள் மத்தியில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு