சென்னை மஞ்சம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் புருஷோத்தமன். இவர் சொந்தமாக டேங்கர் லாரி வைத்து பெட்ரோல், டீசல் விநியோகம் செய்யும் தொழில் செய்துவருகிறார். இந்தியன் ஆயில் விநியோகஸ்தராகவும் இருந்துவருகிறார்.
இந்நிலையில் புருஷோத்தமன் ஆர்.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் தன்னிடம் வேலை பார்ப்பவர்கள் தன்னுடைய லாரியில் ஆயில் அளவு பார்க்கும் அளவுகோலை மாற்றிவைத்து மோசடி செய்து ஆயில் திருடுவதாகப் புகார் அளித்திருந்தார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல் துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், புருஷோத்தமனிடம் ஏற்கனவே பணியாற்றிய கலாநிதி என்பவர் டேங்கர் லாரியில் ஆயில் திருடியது தொடர்பாக அவரை வேலையை விட்டு அனுப்பியதாகவும், அவரை பழி வாங்கக் கலாநிதி திட்டம் திட்டியது தெரியவந்தது.
இதற்காக அவர், பணியிலிருக்கும் குணசேகர்(60)ஆட்டோ ஓட்டுநர் ராஜி(50) ஆகியோருடன் இணைந்து டேங்கர் லாரியில் ஆயில் அளவுகோலை போலியாகத் தயாரித்து புருஷோத்தமன் லாரியில் வைத்து ஆயில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதனையடுத்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள கலாநிதியை வலைவீசித் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் டேங்கர் லார உரிமையாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.