ஆவடி நந்தவன மேட்டூர் கண்ணியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் நாராயணன்(28). இவர் டிராக்டர் வைத்து வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கண்ணபாளையம் அருகே ஆத்தோரம் டிராக்டரை நிறுத்திவிட்டு சென்றார்.
பின்னர் வேலைக்கு செல்ல இன்று வந்து மீண்டும் டிராக்டர் இயக்கியபோது இயங்கவில்லை. இதனையடுத்து நாராயணன் கீழே இறங்கி டிராக்டரை சோதனை செய்துள்ளார். அப்போது டிராக்டரில் இருந்த இரண்டு பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து நாராயணன் ஆவடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது மேற்கண்ட திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது கண்ணம்பாளையம் அருணாச்சலம் நகர் பகுதியை சேர்ந்த பாலு(20), அதே பகுதி குமாரசாமி தெரு, வசந்த நகர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் ஆகிய இருவர் என தெரியவந்தது.

இவர்கள் இருவரையும் ஆவடி காவல் நிலையம் அழைத்து வந்து தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில் டிராக்டரில் இருந்து பேட்டரிகள் திருடியதை இருவரும் ஒப்புக் கொண்டனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் இருவரையும் கைது செய்து பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.