சென்னை: 14ஆம் தேதி இரவு ராயபுரத்தில் உள்ள உணவகத்தில் வேலையை முடித்துக்கொண்டு யஸ்வந்த் என்பவர் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். புதுவண்ணாரப்பேட்டையில் நடந்து வந்து கொண்டிருந்த பொழுது எதிரே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் யஸ்வந்திடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இந்நிலையில், யஸ்வந்த் உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். அதனைத் தொடர்ந்து புது வண்ணாரப்பேட்டையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் டியோ இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்களை மடக்கிப் பிடித்து விசாரித்தனர்.
விசாரிக்கும்போது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து இருந்த நபர் ஒருவர் திடீரென ஓட ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து அவரையும் மடக்கிப் பிடித்து விசாரித்த பொழுது புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ஆனந்த் என்பதும் மற்றொரு நபர் முரளி என்பதும் தெரியவந்தது.
இருவரையும் புது வண்ணாரப்பேட்டை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது யஸ்வந்திடம் பறிக்கப்பட்ட செல்போன், பணத்தை கைப்பற்றி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய புழல் சிறையில் அடைத்தனர். ஊரடங்கு காலகட்டத்தில் இரவு நேரத்தில் நடந்து செல்பவர்களிடம் செல்போன் மற்றும் பணத்தை பறித்து செல்லும் மர்மநபர்களால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: சிறையில் இருக்கும் ஹரி நாடார் மீது மேலும் இரு தொழிலதிபர்கள் புகார்!