தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா ஐசக் சாமுவேல் (60). இவர் சென்னை தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் வசித்துவருகிறார். கடந்த 1989ஆம் ஆண்டு ராஜா பெருங்களத்தூர் மகேஷ் நகரில் உள்ள 3936 சதுர அடி கொண்ட காலி நிலத்தினை ஏழுமலை என்பவரிடமிருந்து வாங்கியுள்ளார்.
இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ராஜா தனது இடத்தை பார்க்க சென்றபோது அங்கு கட்டுமான பணி நடைபெற்றுவந்தது. அதிர்ச்சியடைந்த ராஜா இது குறித்து விசாரித்தபோது ஏழுமலையின் மகனான பார்த்திபன், கிருஷ்ணன், புஷ்பராஜ் பெயரில் நிலம் இருந்தது.
இதனால் உடனடியாக ராஜா மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினருக்கு மோசடி குறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியபோது ஏழுமலை தனது மகன்களுடன் சேர்ந்து சதி திட்டம் தீட்டி போலி ஆவணங்கள் மூலம் ராஜா பெயரில் இருந்த நிலத்தை மீண்டும் ஏழுமலை பெயரில் மாற்றியுள்ளனர். பின்னர் பார்த்திபன், கிருஷ்ணன், ரத்தினம் ஆகியோர் பெயருக்கு நிலத்தை மாற்றம் செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலி ஆவணங்கள் தயாரித்து நிலத்தை அபகரித்ததாக காஞ்சிபுரம் பழைய பெருங்களத்தூரை சேர்ந்த பார்த்திபன்(51), புஷ்பராஜ்(41) ஆகியோரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் கிருஷ்ணனையும் தேடிவருகின்றனர். கைது செய்யப்பட்ட இருவரையும் மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: உரிய ஆவணங்களின்றி கொண்டு வரப்பட்ட ரூ.1.80 லட்சம் பறிமுதல்!