சென்னை திருநகர் காலனியைச் சேர்ந்த சுப்பிரமணியம் என்பவர் ரூ 1.5 கோடி மதிப்புள்ள தனது நிலத்தை போலியான ஆவணம் மூலம் ஆள்மாறாட்டம் செய்து அபகரித்து விட்டதாக, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார்.
அவர் அளித்த புகாரில், 'சோலிங்கநல்லூர் பகுதியில் கடந்த 1973ஆம் ஆண்டு விஜயகுமார் என்பவரிடம் 3 ஆயிரத்து 480 சதுர அடி காலி நிலத்தை கிரையம் செய்தேன். மேலும் இதற்கான கணினி பட்டாவை தான் பெற்றுள்ளேன். தற்போது இந்த இடத்தை விற்பனை செய்ய சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கசான்று, ஆவணத்தை பார்வையிட்ட போது தான் கிரையம் பெற்ற இடத்தில் தன்னை போல் ஆள்மாறட்டம் செய்து ரகுராமன் என்பவருக்குப் பொது அதிகார பத்திரம் பதிவு செய்துள்ளனர்.
அப்போது அதிகார பத்திரத்தைப் பெற்ற ரகுராமன், சந்தோஷ் கோபால் என்பவருக்கு விற்பனை செய்து தனது இடத்தை அபகரித்துள்ளனர். எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென' தெரிவித்திருந்தார்.
இதையடுத்து நடத்திய விசாரணையில், சுப்பிரமணியம் என்பவரை போல் ஆள்மாறாட்ட நபரைப் பயன்படுத்தி, தனது பெயருக்கு பொது அதிகாரம் பெற்ற ரகுராமன், அந்த ஆவணத்தில் ஆள்மாறாட்ட நபரை உண்மையான நபரென அடையாளம் காட்டி சாட்சி கையொப்பமிட்ட விஜயகுமார் ஆகிய இருவரையும் கைது செய்த காவல்துறையினர், நிலமோசடி தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.
சென்னை மாநகரில் சொத்து வாங்கும் நபர்கள், போலி ஆவணம் மூலம் ஏமாந்து நிலத்தை வாங்குவதைத் தவிர்க்க நிலத்தின் அசல் ஆவணங்களை சரிபார்த்தும் நிலங்களை விற்பனை செய்யும் நபர்களை பற்றி விசாரனை செய்தும் நிலத்தை பதிவு செய்யும்படியும், பொருள் இழப்பை தவிர்க்கும்படியும் காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.