நாகப்பட்டினம் மாவட்டம், ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் (எ) அப்புகுட்டி (வயது 43). யுடிஎஸ் (UTS) டிராவல்ஸ்சில் ஓட்டுநராக இவர் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் கோயம்பேடு ஸ்டேட் பேங்க் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஆம்னி பேருந்தைக் காணவில்லை என்று நேற்று (ஆக. 26) இரவு 8.30 மணி அளவில், கோயம்பேடு பேருந்து நிலைய காவல் துறையில் புகாரளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் பேருந்து, செங்குன்றம் சோதனைச் சாவடியை தாண்டிச் செல்வதாக வந்த தகவலின் அடிப்படையில், திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கு அவர்கள் தகவல் கொடுத்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, உடனடியாக திருவள்ளூர் மாவட்டக் காவல்துறை அப்பேருந்தை மீட்டு அதில் இருந்த பெரியபாளையம் பகுதியைச் சேர்ந்த அருண் குமார் (வயது 36), கார்த்திக் (வயது 32) ஆகிய இருவரையும் பிடித்து கோயம்பேடு காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
தொடர்ந்து இருவரிடமும் நடத்திய விசாரணையில், யுடிஎஸ் (UTS) பேருந்து நிறுவனத்தின் மேனேஜர் என நினைத்து புரோக்கர் சந்திரன் என்பவரிடம் பேருந்து வாங்க தாங்கள் 50 ஆயிரம் ரூபாய் கொடுத்ததாகவும், ஒப்பந்தத்தின்படி புரோக்கர் சந்திரன் இதுநாள் வரையில் பேருந்து வாங்கித் தராமலும், கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றிய கோபத்தில் பேருந்தை கடத்திச் சென்றதாகவும் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, மேனேஜர் என நம்பவைத்து, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பேருந்தை குறைந்த விலையில் வாங்கிக் கொடுப்பதாகக் கூறி 50 ஆயிரம் ரூபாய் பணம் பறித்த புரோக்கர் சந்திரனையும் தேடி வருகின்றனர். மேலும் பேருந்தைக் கடத்திய நபர்களிடம் விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.