சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்கள் அஜித்குமார் (22), சாமுவேல் (23). இருவரும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு, பலமுறை சிறை சென்று வந்துள்ளனர்.
சமீபத்தில் சிறையிலிருந்து வெளியே வந்த இவர்கள் இருவரும், புனித தோமையார்மலை துணை ஆணையர் பிரபாகர் முன்னிலையில், இனி எந்தவித குற்றச் செயல்களிலும் ஈடுபட மாட்டோம் என்று ஆதம்பாக்கம் குற்றப்பிரிவு ஆய்வாளர் உள்ளிட்ட இருவர் சாட்சியாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தனர்.
ஆனால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ஆதம்பாக்கம் பகுதியில் வீட்டில் கொள்ளையடித்த சம்பவத்தில் இருவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.
இதையடுத்து, இருவரும் நன்னடத்தை பிரமாண பத்திர உறுதியை மீறி மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட காரணத்தால் அஜித்குமாருக்கு 204 நாட்களும், சாமுவேலுக்கு 289 நாட்களும் பிணையில் வெளி வர முடியாத வகையில் வழக்குப்பதிவு செய்து காவல் துறையினர் புழல் சிறையில் அடைத்தனர்.