சென்னை: வெளிமாவட்டங்களிலிருந்து சிலர் ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்து வருவதாக போதைப்பொருள் நுண்ணறிவு பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
தகவலின் அடிப்படையில் சென்னை ரயில் நிலையங்களில் போதை நுண்ணறிவு பிரிவு காவல் துறையினர் தீவிரமான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் அனைவரையும் சோதனை செய்தனர். அப்போது இரண்டு நபர்கள் சந்தேகத்திற்கிடமாக கையில் மூட்டையுடன் நின்று கொண்டிந்ததை கண்ட காவல் துறையினர், அவர்களை அழைத்து விசாரித்துள்ளனர்.
சோதனையில் சிக்கிய இருவர்
விசாரணையில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த காவல் துறையினர், அவர்கள் வைத்திருந்த மூட்டையை பிரித்து பார்த்துள்ளனர். அப்போது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் இருவரையும் கைது செய்து, விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் இருவரும் தேனி மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சித் (27), பிரபாகரன் (23) என தெரியவந்தது. மேலும் தேனி மாவட்டத்திலிருந்து ரயில் மூலம் கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்வதாக ஒப்புக்கொண்டனர்.
பின்னர் இருவர் மீதும் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, அவர்களிடமிருந்து 28 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: சிசிடிவி இருந்தா என்ன - அலேக்காக பைக்கை திருடும் பலே கொள்ளையர்