சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக சென்னையில் நேற்று முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வரும் நிலையில், 20 ஆயிரம் மாநகராட்சி பணியாளர்கள் களத்தில் பணியாற்றி வருவதாக மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.
பொறியாளர்கள், சுகாதார அலுவலர்கள், தூய்மை பணியாளர்கள் என 15 மண்டலங்களில் 200 வார்டுகளில் 20,000 பணியாளர்கள் மழைநீர் தேங்காமலும், வழக்கமான பணிகள் பாதிக்காமல் இருக்கவும் களத்தில் பணியாற்றி வருகின்றனர்.
கடந்த ஆண்டு மழையின்போது, 500-க்கும் மேற்பட்ட இடங்களில் மோட்டார் பம்புகள் வைத்து தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், இந்த முறை 420 இடங்களில் மோட்டார் பம்புகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் 56 பம்புகள் மட்டுமே தற்போது வரை இயக்கப்பட்டு வருகின்றன.
25 இடங்களில் மரம் விழுந்துள்ளதாகவும், அதில் பெரும்பாலும் கிளைகள் மட்டுமே முறிந்திருப்பதாகவும் கூறப்படும் நிலையில் 17 இடங்களில் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு உள்ளன. சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளில் இரண்டு இடங்களில் மட்டுமே மழைநீர் தேங்கி உள்ளது. அதுவும் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத அளவில் உள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழையின் பிடியில் சிக்கிய வடசென்னை