ஹைதராபாத்: மோடி என்ற பெயர் குறித்து அவதூறாக பேசியதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது குஜராத் மாநிலத்தின் சூரத் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், மோடி என்ற பெயருக்கும், பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கும் எதிராக அவதூறு பரப்பும் விதமாக ராகுல் காந்தி பேசியதாக கூறி சூரத் நீதிமன்றம் அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, மார்ச் 23ஆம் தேதி தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது. அதோடு மார்ச் 23ஆம் தேதி முதல் அவரது தண்டனை காலம் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், ராகுல் காந்தி 8 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் ஆங்காங்கே பெரும் போரட்டங்களை நடத்தி வருகின்றனர். அத்துடன் பாஜகவின் தலைமை அலுவலகங்களை முற்றுகையிட்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களையும் எழுப்பி வருகின்றனர்.
இதையும் படிங்க: "ராகுல் காந்தியின் தகுதி நீக்க ஆணையை திரும்பப் பெறுக" - திருமாவளவன் கோரிக்கை
குறிப்பாக, மேற்கு வங்கம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல தலைவர்களும் தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில், சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராடுவோம் என்று காங்கிரஸ் தலைமை தெரிவித்துள்ளது. இதனிடையே, காங்கிரஸ் கட்சியில் இருந்த போது, நடிகை குஷ்பு பதிவிட்ட டிவிட்டர் பதிவு பெரும் பேசுபொருளாக மாறிவருகிறது.
தற்போது பாஜகவில் அங்கம் வகித்து வரும் குஷ்பு, இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தபோது, பாஜகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். அந்த வகையில், கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் நாள் அவர் பதிவிட்ட ட்விட்டர் பதிவில் ராகுல் காந்தியை போலவே அவரும் மோடி பெயரை திருடர்களுடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்திருந்தார்.
இதனடிப்படையில் மோடி பெயர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தும், எம்பி பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தும் எடுக்கப்பட்ட நடவடிக்கை குஷ்பு மீதும் எடுக்கப்படுமா என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். குஷ்பு பிப்ரவரி 23ஆம் தேதி தேசிய மகளிர் ஆணைய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிலையில் இந்த பதிவின் அடிப்படையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு அக்கட்சியிலேயே உள்ள குஷ்பு மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதா? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.
இதையும் படிங்க: "சிறையோ,தகுதி நீக்கமோ" அச்சமில்லை எனக்கு - ராகுல்காந்தி பேச்சு