சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம். குவாத்தமாலா, எல் சால்வடார் உள்ளிட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் தங்களது விற்பனையை அதிகரிக்க, கடிசா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதாக டிவிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அவ்விரு நாடுகளிலும் கடிசா நிறுவனத்திற்கு பரந்து விரிந்த விற்பனை நிலையங்கள் உள்ளன.
இந்த கூட்டணியின் மூலம், 15 டிவிஎஸ் நிறுவன விற்பனையகங்களைத் திறக்க கடிசா உதவும். இதுதவிர, குவாத்தமாலாவில் 17 நிறுவன வாகன விற்பனையகங்களிலும், 150 சில்லறை விற்பனை நிலையங்களிலும் டிவிஎஸ் நிறுவனம் வாகனங்களை விற்பனை செய்யவுள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள டிவிஎஸ் நிறுவனத்தின் சர்வதேச வணிகப் பிரிவுத் துணைத் தலைவர் திலீப், "மத்திய அமெரிக்க நாடுகளில் எங்களது வணிகத்தை விரிவுபடுத்த கடிசா நிறுவனத்துடன் இணைந்துள்ளோம். அப்பகுதியில் உள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்த அந்நிறுவனத்திற்கு நீண்ட அனுபவமும் உள்ளது" என்றார்.
அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி (Apache RTR 200 4V), ஆர்டிஆர் 180, (RTR 180), ஆர்டிஆர் 160 2வி (RTR 160 2V), ஸ்டிரைக்கர் 125 ( Stryker 125) ஆகிய மோட்டார் வாகனங்களும், வீகோ ஸ்கூட்டர் மற்றும் கிங் மூன்று சக்கர ஆட்டோ ஆகிய வாகனங்களும் குவாத்தமாலா, எல் சால்வடார் நாடுகளில் விற்பனை செய்யப்படும் என டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: சென்செக்ஸ் வரலாறு காணாத உச்சம்! வர்த்தகர்கள் மகிழ்ச்சி