கரோனா தொற்று பாதிப்பால், ஆட்டோமொபைல் துறை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்தது. உலகம் முழுவதும் வாகன விற்பனை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கரோனா பாதிப்புகள் குறைந்து இயல்புநிலை திரும்பிவருவதால், ஆட்டோமொபைல் துறையும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பியுள்ளது.
அந்த வரிசையில், டிவிஎஸ் நிறுவனம் மார்ச் மாதத்தில் மட்டும் ஒரு லட்சம் இருசக்கர வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகளாவிய சந்தையில் ஏற்றுமதி அதிகரித்ததன் காரணமாகவே தங்களது விற்பனை உயர்ந்துள்ளதாக அந்நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.
இது குறித்து பேசிய டிவிஎஸ் நிறுவன இணை மேலாண் இயக்குநர், "இந்தியத் தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதில் தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறோம். கடந்த சில ஆண்டுகளாகவே டிவிஎஸ் நிறுவனம் உலகின் பல்வேறு பகுதிகளில் தங்களது தயாரிப்புகளை விற்பனைசெய்வதில் வளர்ச்சி கண்டுவருகிறது.
தற்போது, இந்தியா தவிர தென்கிழக்கு ஆசியா, லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா என 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை நடைபெறுகிறது. குறிப்பாக, டிவிஎஸ் அப்பாச்சி, ஹெச்.எல்.எக்ஸ். (HLX) சீரீஸ், டிரைக்கர் சீரீஸ் ஆகியவை அதிகளவில் விற்பனைசெய்யப்படுகின்றன.
அடுத்தகட்டமாக வட அமெரிக்கா, ஐரோப்பியக் கண்டங்களுக்கு வாகன விற்பனையை விரிவுபடுத்த திட்டமிட்டிருக்கிறோம். வணிகத்தை இந்தியாவிற்கு வெளியே எடுத்துச் செல்வதை அதிகப்படுத்துவதற்காக, இங்கிலாந்தில் சோலிஹல் (Solihull) பகுதியில் அதிநவீன உற்பத்தித் தொழிற்சாலை நிறுவ முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. அடுத்த ஆறு மாதங்களில் அங்கு வாகன உற்பத்தி தொடங்கும்" என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: லத்தீன் அமெரிக்க நாடுகளில் முதலீடு வாய்ப்பு: இந்திய தொழில் துறைக்கு அழைப்பு!