சென்னை: இது குறித்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,“மேற்கு வங்காள மாநிலம், ஹூக்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 8 வயது குழந்தை பிரிதம் தாஸ். அவர் மூக்கில் பருவ வயது ஆண் சிரார்களுக்கு வரக்கூடிய ரத்தநாள சதைநார் கட்டியால் (JNA) பாதிக்கப்பட்டு இருந்தார். அது நான்காவது கட்டம் (Stnge-lV), அதாவது கண்ணுக்கும், மூளையின் வெளியுரைக்கும் வெகு அருகில் பரவியுள்ளது என்பதை எய்ம்ஸ் கல்யாணி மருத்துவமனையில் கண்டறிந்தனர். அதற்கு சிகிச்சை முறை அங்கு இல்லாத காரணத்தினால் தமிழ்நாட்டில் வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும், பாண்டிச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கும் சென்றுள்ளனர். அங்கேயும் சீரிய சிகிச்சை கிடைக்கப் பெறாததால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தனர்.
இங்கு அவரை கடந்த ஜூன் 8ம் தேதி காது மூக்கு, தொண்டை துறை பேராசிரியர் மரு.என்.சுரேஷ்குமார் தலைமையிலான மருத்துவக்குழு பரிசோதனை செய்த பின்னர், உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு அனைத்து முதற்கட்ட பரிசோதனைகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டன.
அதனைத் தொடர்ந்து ஜூன் 22 காது மூக்கு தொண்டை துறை, இரத்தநாள சிறப்பு அறுவை சிகிச்சை துறை மற்றும் மயக்கவியல் துறை ஆகிய துறைகளை சார்ந்த மூத்த மருத்துவர்கள் குழு தலைமையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வாங்கப்பட்ட அதிநவீன உபகரணமான COBLATOR என்னும் கருவியை கொண்டு என்டோஸ்கோபி முறையில் மூக்கின் துவாரம் வழியாக இந்த கட்டியானது மூளையின் அடிப்பகுதியில் இருந்தும், கண்களுக்கு அருகில் இருந்தும் முழுமையாக அகற்றப்பட்டது. ஒரு வாரம் சிகிச்சை பெற்ற பின்னர் அந்த சிறுவன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நல்லமுறையில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இப்பொழுது அந்த சிறுவன் நலமாக உள்ளார்” என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தானமாக வழங்கப்பட்ட சொத்துக்களில் உரிமை கோர முடியாது: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி.!