தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக, பள்ளிகள் மார்ச் மாதம் 24ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளது. பள்ளிகள் எப்போது திறக்கும் என்பது தொடர்பாக எவ்வித அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. மேலும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.
தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் தவணை முறையில் கட்டணம் வசூல் செய்யவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தனியார் பள்ளிகள் பெற்றோர்களை நேரில் வரவழைத்து கட்டணம் செலுத்த வேண்டும் என வற்புறுத்துவதாகப் புகார் எழுந்தது. இந்நிலையில், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் கருப்புசாமி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், கரோனா வைரஸ் பரவல் காரணமாக தமிழ்நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு, பள்ளிகளை மூடுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த நடவடிக்கைகள் தற்போது வரை நீட்டிக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், கடந்த 2020-21 ஆண்டிற்கான கல்வி கட்டணம் வசூல் மற்றும் புதிய மாணவர் சேர்க்கை ஆகிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில், கல்வி கட்டணங்களை இணைய வழியாக பெறுதல் பாதுகாப்பாக கருதப்படுகிறது.
கட்டணம் செலுத்துதல் பொருட்டு பெற்றோர்களை பள்ளிக்கு அல்லது பள்ளி கணக்கு பராமரிக்கும் வங்கிகளுக்கு நேரில் வரவழைத்து, தனிமனித இடைவெளியை பின்பற்றுகிறது என்பதை சரிவர கண்காணிப்பது என்பது மிகவும் சிரமமாக இருக்கும். எனவே, தனியார் சுயநிதி பள்ளிகளில் கல்வி கட்டணங்களை இணைய வழியாக பெற நடவடிக்கைகள் மேற்கொள்ள முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்படுகிறது.
மேலும் கட்டணம் பெற இணையவழி வசதி இதுவரை ஏற்படுத்தாத பள்ளிகள் அதனை உடனே ஏற்படுத்தி பெற்றோர்களுக்குத் தகவல் தெரிவித்து நடைமுறைப்படுத்த வேண்டும்" என அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.