புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மாயமான ஏழு வயது சிறுமி நேற்று (ஜூலை 1) மாலை சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து காவல்துறையினர், சிறுமியின் உடலை கைப்பற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரிக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். அதில் சிறுமி பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகி இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஏம்பல் கிராமத்தில், பால்மணம் மாறாத ஏழு வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது மனதை உலுக்குகிறது.

சிறுமியின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகைய கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு விரைந்து கடுமையான தண்டனையை வழங்க வேண்டும்" என்றார்.
