ஈரான் நாட்டில் இருந்து கடந்த மார்ச் மாதம் 22ஆம் தேதி, அந்நாட்டை சேர்ந்த ஹாசன் என்பவருக்கு சொந்தமான இரண்டு விசைப்படகில் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 15 பேர், ஈரான் மீனவர்கள் 4 பேர் மற்றும் இந்திய மீனவர்கள் என மொத்தம் 28 பேர் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றுள்ளனர்.
மீனவர்களை சிறை பிடித்த கத்தார் கடற்படையினர்
மார்ச் மாதம் 25ஆம் தேதி, அவர்கள் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அவ்வழியாக ரோந்து சென்ற கத்தார் கடற்படையினர் குமரி மீனவர்கள் உள்பட 28 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்கள், ஏப்ரல் 19ஆம் தேதி நீதிமன்றத்தின் முன்நிறுத்தப்பட்ட நிலையில், சுமார் ரூ.2 கோடியே 80 லட்சம் அபராதமாக செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இத் தொகையைச் செலுத்த ஈரான் படகு உரிமையாளர் மறுத்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்கள் கத்தார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்களை மீட்க டிடிவி வலியுறுத்தல்
இது தொடர்பாக அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ’கத்தார் நாட்டு கடற்படையால் நடுக்கடலில் கைது செய்யப்பட்டு, அந்நாட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் 15 பேரை மீட்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசும், தமிழ்நாடு அரசும் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் தூத்தூர், கொடிமுனை, இனையம், ராமன்துறை, மிடாலம், முள்ளூர்துறை, குறும்பனை உள்ளிட்ட ஊர்களைச் சேர்ந்த இந்த மீனவர்கள் அனைவரும் கத்தார் நாட்டில் சிறைவைக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும், அரசு நிர்வாகம் அவர்களை மீட்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. பாதிக்கப்பட்டுள்ள மீனவர் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்குவதோடு, மீனவர்கள் அனைவரையும் கத்தாரில் இருந்து சிறை மீட்டு வர மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க:கரோனா உயிரிழப்புகளைக் குறைக்கும் `ப்ரோனிங்’ சிகிச்சை முறை!