கரோனா அச்சுறுத்தலால் தமிழ்நாடு முழுவதும் ஒரு மாதத்திற்கும் மேலாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. இதனால் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்படாத நிலையில், ஜூன் 1ஆம் தேதியிலிருந்து 10ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். அறிவிப்பு வெளியானதிலிருந்து பல்வேறு எதிர்க்கட்சிகள் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என வலியுறுத்தின.
அந்த வகையில் அமமுக பொதுச்செயலாளார் டிடிவி தினகரன் ட்விட்டர் பக்கத்தில் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். அதில், ”கரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்லும் சூழலில் திடீரென 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான தேதிகளை அரசு அறிவித்திருப்பது சரியான முடிவல்ல. ஜூன் மாத இறுதிக்குப் பிறகே தேர்வு அட்டவணை வெளியிடப்படும் என்று நான்கு நாள்களுக்கு முன்பு கூறியிருந்த கல்வி அமைச்சர் இப்போது அவசரமாக இந்த அறிவிப்பை வெளியிட்டது ஏன்? அதற்குள் என்ன நடந்தது? எல்லாவற்றையும் போல இதிலும் ஆட்சியாளர்கள் குழப்பத்தின் உச்சத்தில் இருக்கிறார்களா?
கடந்த ஒரு வாரமாக பல நூறு பேர் நாள்தோறும் கூடுதலாக கரோனாவால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், ஆசிரியர்கள், கல்வித் துறை ஊழியர்கள், லட்சக்கணக்கான மாணவர்களின் உயிரோடு விளையாடும் இம்முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும். மேலும் பெருந்தொற்று நோயால் அனைவரும் உளவியல் ரீதியாக மிகப்பெரிய தாக்கத்திற்கு ஆளாகியிருக்கும் நேரத்தில் இத்தேர்வுகளை நடத்த வேண்டிய அவசியம் இல்லை.
மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிய பிறகு இதைப் பற்றி யோசிக்கலாம். அதுவரை பொதுத்தேர்வினை தள்ளிவைத்துவிட்டு, நோயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவருதிலும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான பணிகளைச் செய்வதிலுமே அரசு எந்திரத்தின் முழுக் கவனமும் இப்போதைக்கு இருக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 10 ஆம் வகுப்புத் தேர்வை தள்ளி வைக்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!