பாசனத்திற்காக மேட்டூர் அணை விரைவில் திறக்கப்பட உள்ள நிலையில், கடைமடை வரை தண்ணீர் செல்வதை உறுதி செய்யவும், தூர்வாருவதில் கவனம் செலுத்தகோரியும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் ”மேட்டூர் அணை விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில் இந்த ஆண்டாவது கடைமடை பாசனப்பகுதி வரை தண்ணீரைக் கொண்டு செல்வதற்கான பணிகளில் அக்கறை காட்டாமல், திமுகவினரோடு கூட்டணி அமைத்து, சட்டவிரோதமாக மணல் அள்ளுவதில் ஆளுங்கட்சியினர் தீவிரமாக இருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.
குறுவை பயிர் சாகுபடிக்காக மேட்டூர் அணை, வரும் ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படவிருக்கிறது. இதற்கான அறிவிப்புக்கு முன்பே நீர்நிலைகளைத் தூர்வாரி சீரமைப்பதற்காக, தமிழ்நாடு அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது. எனினும் பெரும்பாலான இடங்களில் இதற்கான பணிகள் வெளிப்படையாக நடைபெறவில்லையென குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதனால் பணிகள் நடைபெறுவதைப் போல காண்பிப்பதற்காக சிறப்பு அலுவலர்களை நியமித்தார்கள். அதன் பிறகும் தூர்வாரும் பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை என்றே தகவல்கள் வெளிவருகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளைப் போல இந்த ஆண்டு தண்ணீர் வரும் கடைசி நேரத்தில் அரைகுறையாக தூர்வாரினால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், காவிரி டெல்டாவின் கடைமடை பாசனப் பகுதிகள் வரை முழுமையாக சென்றடையாது என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நிலைமை இப்படியிருக்க, ஊருக்கு ஊர் ஆளுங்கட்சியினரும், பிரதான எதிர்க்கட்சியான திமுகவினரும் யாருக்கும் தெரியாமல் கூட்டணி அமைத்து, சட்ட விரோத மணல் கொள்ளையில் ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஆட்சியாளர்கள் இதனை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். மேலும் கரோனா கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால் அனைத்து விவசாயிகளுக்கும் சாகுபடிக்கான உரம் உள்ளிட்ட இடுபொருட்களை, குறைந்தபட்சம் 50 விழுக்காடு மானியத்தில் வழங்குவதற்கும், அவை தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கும் தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தொடர்ந்து சாகுபடிப் பணிகளைச் செய்வதற்கு பெருமளவு பம்ப்செட் பாசனத்தையும் நம்பியிருப்பதால் விவசாயத்திற்காக வழங்கப்படும் மும்முனை மின்சாரத்தை (3 Phase) நாள்தோறும் குறைந்தபட்சம் 12 மணி நேரம் தடையின்றி வழங்கிட வேண்டும்.
இதே போன்று விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சிறப்புக் கடன் உதவிகளை, வங்கிகள் மறுப்பேதும் சொல்லாமல் வழங்குகின்றனவா என்பதையும் அரசு கண்காணிக்க வேண்டும். விவசாயம் மற்றும் விவசாயப் பணிகள் தொடர்பாக வரும் புகார்களுக்கு முன்னுரிமை அளித்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்திட வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க : 'குறுவை சாகுபடிக்காக தூர்வாரும் பணிகளை முடிக்க வேண்டும்' - ஆட்சியர் உத்தரவு