சென்னை: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அதிமுக இரண்டாக பிரிந்தது. அதாவது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியும், வி.கே. சசிகலா மற்றும் டிடிவி தினகரன் தலைமையில் ஒரு அணியும் எனப்பிரிந்தது. அப்போது அதிமுக சின்னமான இரட்டை இலை-க்கு, கடும் போட்டிகள் நடைபெற்றன. இதனால் சின்னத்தை முடக்கிய தேர்தல் ஆணையம், ஏதேனும் ஒரு அணிக்கு மட்டுமே சின்னம் வழங்கப்படும் எனத்தெரிவித்தது.
இந்நிலையில், வி.கே.சசிகலா தலைமையிலான அணியினர், இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவதற்காக, தேர்தல் ஆணையத்திடம் லஞ்சம் கொடுக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டு எழுந்தது. இதில், ரூ.50 கோடி பேரமும் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக டிடிவி தினகரன் மற்றும் சுரேஷ் சந்திர சேகர் மீது, டெல்லி குற்றவியல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், டிடிவி தினகரன், சுரேஷ் சந்திர சேகர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில், டிடிவி தினகரன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், இதுதொடர்பாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலர்கள் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், கடந்த 4ஆம் தேதி, வழக்கைப் பதிவு செய்த அமலாக்கத் துறையினர் முதலில் சுரேஷ் சந்திரசேகரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், டிடிவி தினகரன் தனக்கு 25 கோடி பணம் கொடுத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில், டிடிவி தினகரனிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை அலுவலர்கள், கடந்த வாரம் சம்மன் அனுப்பினர். இதையடுத்து, நேற்று (ஏப். 12) காலை 11 மணிக்கு டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில், டிடிவி தினகரன் ஆஜர் ஆனார். அங்கு அவரிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
தற்போது விசாரணை முடிந்து இன்று (ஏப்ரல் 13) சென்னை திரும்பிய டிடிவி தினகரன், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். “சுரேஷ் சந்திரசேகர் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு மாதிரி மாற்றி வாக்குமூலம் அளித்து வருகிறார். என்னை சிக்க வைப்பதற்காக அவர் மாற்றி மாற்றி சொல்கிறார் என்று நினைக்கிறேன். நான் நிரபராதி, எந்த தவறும் செய்யவில்லை.
சுரேஷ் சந்திரசேகர் சொன்ன வாக்குமூலத்தின் அடிப்படையில் என்னிடம் விசாரிக்க வேண்டிய கட்டாயம் அலுவலர்களுக்கு ஏற்பட்டது. அதனால் என்னை அழைத்து விசாரணை நடத்தினார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை என்று அவர்களிடம் சொல்லி இருக்கிறேன்” எனக் கூறினார்.
பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து வி.கே.சசிகலாவை நீக்கியது செல்லும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து டிடிவி தினகரனிடம் கேட்கப்பட்டது.
அதற்கு, அதிமுக முக்கிய நிர்வாகிகள் இது குறித்து பேசுவதை தானும் கேட்டேன் என கூறிய டிடிவி தினகரன், இது குறித்து சசிகலா முடிவு எடுத்து நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வார் எனத் தெரிவித்தார்.