அரக்கோணம் அருகே சோகனூரைச் சேர்ந்த அர்ஜுனனும், செம்பேடு காலனியைச் சேர்ந்த சூர்யாவும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் நேற்று முன்தினம் கௌதம நகர்ப் பகுதியில் 10 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலைசெய்யப்பட்டனர். இருவரையும் கொலைசெய்தவர்கள் பாமக கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று விசிகவினரால் கூறப்படுகிறது.
இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில், “அரக்கோணத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அர்ஜுன், சூர்யா என்ற இரு இளைஞர்கள் முன்விரோதத்தால் கொடூரமாகக் கொல்லப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
பெரும் அதிர்ச்சியளிக்கக்கூடிய இந்தப் பாதகத்தைச் செய்தவர்கள் மீது காவல் துறை உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொல்லப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருக்குத் தமிழ்நாடு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இத்தகைய வன்மம் நிறைந்த செயல்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுத்திட வேண்டியது அவசியம்” எனப் பதிவிட்டுள்ளார்.