மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாளான இன்று சென்னை மெரினாவிலுள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி மலர்த்தூவி மரியாதை செய்தார். அப்போது பேசிய அவர், "இந்தியத் திருநாட்டிற்கு சத்தியத்தையும், தியாகத்தையும், சேவையையும் பரிசாக அளித்தவர் அண்ணல் காந்தியடிகள். கடவுளை நாம் பார்த்ததில்லை என்பதற்காக கடவுள் நமக்கு அனுப்பி வைத்த கடவுள் தான் மகாத்மா காந்தி. அவருடைய தத்துவத்தை தமிழக காங்கிரஸ் முன்கொண்டு செல்லும்.
அமெரிக்க பிரதமர் ட்ரம்பிற்கு இந்திய வரலாறும் தெரியாது. உலகத்தின் வரலாறும் தெரியாது. அதனால் தான் இந்தியாவின் தந்தை மோடி என்று கூறியுள்ளார். அவர்தான் அப்படி கூறிவிட்டார். குறைந்தபட்சம் அதை வெளியில் வந்து மோடி மறுத்திருக்க வேண்டும். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. இந்தியாவின் தந்தை என்றால் அது மகாத்மா காந்தி ஒருவர் மட்டுமே தான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அதிமுகவைப் போல் பணத்தை வாரி இறைக்கின்ற கட்சி இந்தியாவிலேயே இல்லை. இந்தியாவிலேயே மிகப்பெரிய அளவில் பணத்தை வாரி இறைத்து தேர்தல் ஆணையத்தையே செயலிழக்க வைத்தவர்கள் அதிமுகவினர்.
ரூபி மனோகரன் 40 ஆண்டுகாலம் காங்கிரஸ் கட்சியில் இருப்பவர். அவருடைய உழைப்பிற்கும், தியாகத்திற்கும் தான் காங்கிரஸ் மேலிடம் இந்த வாய்ப்பை அவருக்கு வழங்கி உள்ளது. அமைச்சர் ஜெயக்குமார் சொல்வது போல் அவர் செல்வந்தர் அல்ல. அவர் ஒரு கடனாளி. அவருடைய பல சொத்துக்கள் அடமானத்தில் இருக்கின்றன.
மேலும் தொகுதிவிட்டு தொகுதி மாறி நிற்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறுகிறார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எப்போதாவது ஒரே தொகுதியில் நின்று இருக்கிறாரா? மிகுந்த மக்கள் செல்வாக்கை பெற்றுள்ள கட்சி என்று சொல்லிக்கொள்ளும் அதிமுக ஏன் ஜெயலலிதாவை ஒரே தொகுதியில் போட்டியிட வைக்கவில்லை. இதுபோல் அதிமுகவுக்கு ஏராளமான உதாரணங்கள் கூறலாம். அமைச்சர் ஜெயக்குமாரே பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்தவர். ஆனால் அவர் போட்டியிட்டது ராயபுரம் தொகுதியில் தான். அதிமுக கண்ணாடி வீட்டிற்குள் இருந்துகொண்டு பிறர் மீது கல் எறியக்கூடாது'என்றார்.
இதையும் படிங்க:‘காந்தியின் கொள்கைதான் காங்கிரசின் பலம்’ - கே.எஸ். அழகிரி பெருமிதம்!