சென்னை: தீபாவளி வெகுமதியை (bonus) 20 விழுக்காடாக உயர்த்தி வழங்கக் கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் இன்று போராட்டம் நடத்தினர். சிஐடியூ, தொழிலாளர் முன்னேற்ற சங்கம், எச்எம்சி, ஐஎன்டியூசி உள்ளிட்ட 10 போக்குவரத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட போக்குவரத்துத் தொழிலாளர்கள் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
வெகுமதி தொகையை உயர்த்தி வழங்குவது, பண்டிகை கால முன்பணத்தை விரைந்து வழங்குவது, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கான பணப்பலனை உடனடியாக வழங்க வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
போராட்டத்தின்போது பேசிய தொழிலாளர் முன்னேற்ற சங்க பொதுச்செயலாளர் நடராசன், "போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 10 விழுக்காடாக வெகுமதித் தொகை குறைக்கப்பட்டுள்ளதன் மூலம் 16,800 ரூபாயிலிருந்து வெகுமதிப் பணம் 8,400 ஆக குறைந்துள்ளது. கரோனாவை காரணம் காட்டி 2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் 31 வரையான வெகுமதியை குறைப்பதில் நியாயமில்லை.
2016ஆம் ஆண்டில் ஊதிய ஒப்பந்தத்தில் மற்ற அரசு ஊழியர்களுக்கு போனஸ் தரப்படுவதில்லலை என்று கூறி போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2.44 விழுக்காடுதான் ஊதியம் தர முடியும் என்றார்கள்.வெகுமதியை காரணம் காட்டி ஊதியத்தை குறைத்தவர்கள் தற்போது வருவாய் குறைந்துள்ளது என்று கூறி வெகுமதியைப் பறித்துள்ளனர் .
இந்த ஆர்ப்பாட்டம் மூலம் நல்ல முடிவு கிடைக்கவில்லை என்றால் எங்களின் போராட்ட வடிவம் மாறும். தற்போதைய அரசு பல அரசு பேருந்துகளை நிறுத்தி வைத்து தனியார் பேருந்துகளை ஊக்குவித்து வருகிறது. சட்டப்பிரிவு 288 (A) திருத்தப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளோம் " என்றார்.
இதையும் படிங்க: போக்குவரத்து காவலர்களைக் கண்டித்து செங்கொடி சங்கத்தினர் போராட்டம்