சென்னை: வரும் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் மூன்று நாள் தொடர் விடுமுறைக்காக சொந்த ஊர் செல்லும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்த அமைச்சர், ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்தால் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தி பேருந்து உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் எனவும் பேருந்து பயணிகளும் இது குறித்து வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் புகார் தெரிவிக்கலாம் எனவும் தெரிவித்தார்.
குறிப்பாக திருச்சி, மதுரை, நெல்லை, கோவை போன்ற தொலைதூர நகரங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வந்துள்ளதால் இன்று மாலை போக்குவரத்துதுறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்ய உள்ளனர் எனவும் கூடுதல் கட்டணம் தொடர்பாக பொதுமக்கள் தங்களது எல்லைக்கு உட்பட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:ஈ தொல்லை தாங்க முடியவில்லை என மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த கிராம மக்கள்