ஊரடங்கு காலத்தில் மாற்றுத்திறனாளிகள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அடையாள அட்டை வைத்திருக்கும் 13.35 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பின் அடிப்படையில் 133 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று அவர்களுக்கான ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து,மாவட்ட ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இந்த அறிவிப்பை முறைப்படி செயல்படுத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், ஒரு சில மாற்றுத்திறனாளிகள் இருப்பிடம் மாறி வசிப்பதாகவும், அவர்கள் நிவாரணம் பெறுவதில் சிக்கல் இருப்பதாகவும் புகார் எழுந்த நிலையில் இடம் மாறி வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் கடிதம் எழுதியுள்ளது.