திருநங்கைகளை தொழில் முனைவோர்களாக ஆக்கும் பொருட்டு பிரபல டீத்தூள் நிறுவனம் த்ரி ரோஸஸ், சகோதரன், தோழி ஆகிய அமைப்புகளுடன் இணைந்து திருநங்கைகளுக்கான தேநீர்க்கடை திறக்க உதவி செய்துள்ளனர்.
திருநங்கை லதா தேநீர் கடையைத் திறந்து முதன்முதலில் விற்பனையை ஆரம்பித்தார். திறப்பு விழாவில் 'காப்பி கபே' படத்தின் இயக்குநரான அருண்குமார் செந்தில் விருந்தினராகப் பங்கேற்றார்.
பின்னர் சகோதரன் அமைப்பின் பொது மேலாளர் ஜெயா செய்தியாளர்களிடம் பேசினார். இதுகுறித்து அவர் பேசுகையில், 'த்ரி ரோஸஸ் நிறுவனம் திருநங்கைகளை முதலாளியாக மாற்ற வேண்டும் என்ற நோக்கில் முதற்கட்டமாக ராயப்பேட்டை பகுதியில் தேநீர்க்கடை அமைத்துக் கொடுத்துள்ளது. கடை திறப்பதற்கான முன் தொகை, வாடகை உள்ளிட்ட மூன்று மாதச் செலவை த்ரி ரோஸஸ் நிறுவனமே கவனித்துக் கொள்கிறது. அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுவதும் திருநங்கைகள் பணிபுரியும் தேநீர் கடையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது' என்றார்.
இதனால் பயன்பெற்ற திருநங்கை லதா கூறுகையில், 'சேப்பாக்கம் பகுதியில் தங்கி இலை, பாக்கு விற்று வந்தேன். என்னிடம் சகோதரன், தோழி அமைப்பினர் ''தேநீர்க்கடை வைத்து நடத்த ஆர்வமுள்ளதா?'' என்று கேட்டனர்.
அதற்கு சம்மதம் தெரிவித்ததால் சொந்தமாக தேநீர்க் கடையை வைத்து கொடுத்துள்ளனர். மேலும் பணப்பற்றாக்குறையினால் அவதிப்பட்டு வரும் திருநங்கைகளுக்கு உதவி செய்யும் த்ரி ரோஸஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்றார்.
இதையும் படிங்க: விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று பாரத் பந்த்- போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்பு!