திருவாரூர் மாவட்ட திமுக மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூண்டி கலைவாணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பிணை மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் கடந்த ஜனவரி 26ஆம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, திமுக சார்பில் தோழமைகள் கட்சிகளுடன் டிராக்டர் பேரணி போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தை அனுமதியின்றி நடத்தியது, அதனை தடுக்க அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளை டிராக்டர் கொண்டு ஏற்றி பொது சொத்திற்கு சேதம் விளைவித்தல், இதில் ஆயுதப்படை பிரிவு காவலர்கள் இருவருக்கு கட்டை விரல், சுண்டு விரலில் காயம் ஏற்பட்ட காரணத்திற்காக கொலை முயற்சியில் ஈடுபட்டது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் அரசியல் நோக்கங்களுக்காக காவலர்களுக்கு ஏற்பட்ட சிறு கீரல்களை கொலை முயற்சி எனக் கூறி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இவ்வழக்கில் கைது செய்து விசாரிக்க அனுமதிக்கக்கூடாது என கோரி முன்பிணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இவற்றை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், விசாரணைக்கு தேவைப்படும் நேரங்களில் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் அனைவருக்கும் முன்பிணை வழங்கி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: 'மக்கள் இன்னொரு ஊரடங்கை தாங்க மாட்டார்கள்'-மு.க.ஸ்டாலின்!