இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பாஜக அரசின் வேளாண் சட்டங்கள் திமுகவின் 2016 சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றவை” என்று, தேர்தல் அறிக்கையை படித்துப் பார்க்காமல் பகிரங்கமாக பொய் பேசியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமிக்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முதலமைச்சரின் வார்த்தைகளைக் கேட்ட தனியார் நாளேடு ஒன்று, நேற்றைக்கு “பதவி வெறி படுத்தும் பாடு” என்று ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளது. திமுகவின் தேர்தல் அறிக்கையை வெட்டி, ஒட்டி பிரசுரித்து, ஒரு முதல் பக்கக் கட்டுரையைத் தீட்டியுள்ளது அந்த நாளிதழ்.
முதலமைச்சரும் அந்த நாளிதழும் திமுகவிற்கு விவசாயிகள் மத்தியில் பெருகி வரும் ஆதரவைப் பார்த்த ஆதங்கம் கண்ணை மறைத்துள்ளது. திமுக 2016 தேர்தல் அறிக்கையில் வேளாண்மை என்ற தலைப்பில் மட்டும் வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கை, நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை உயர்த்தல், சிறு - குறு விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்கள் முழுவதும் தள்ளுபடி உள்ளிட்ட 54 தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளது.
வேளாண் பொருள்களைச் சந்தைப்படுத்துவதற்கான ஒரு புதிய கொள்கை உருவாக்கப்படும் என்று அறிவித்த வாக்குறுதி கார்ப்பரேட்டுகளும் விவசாயிகளும் ஒப்பந்த விவசாயம் செய்து கொள்வதற்காக அல்ல என்ற அடிப்படை கூடத் தெரியாமல் முதலமைச்சர் பேசியிருப்பது அவர் எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதை காட்டுகிறது.
குறைந்தபட்ச ஆதார விலை கொடுக்கப்படும், இலவச மின்சாரம் தொடரும், உழவர் சந்தை விரிவுபடுத்தப்படும், நடமாடும் சந்தைகள் அமைக்கப்படும் என்ற 2016ஆம் ஆண்டில் அளித்தவாக்குறுதிகள் இன்று கூட முதலமைச்சரை பயமுறுத்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
விவசாயிகளுக்கு அடுக்கடுக்காகச் செய்த பாவங்களுக்கு பிராயச்சித்தம் தேட விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களுக்கு, தான் வாக்களித்ததை மறைக்க, திமுக தேர்தல் அறிக்கையில் இல்லாதவற்றை மையபப்டுத்தி பரப்புரை செய்வது கீழ்த்தரமானது.
தனது ஊழல் முறைகேடுகள் குறித்து, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சிபிஐ, அமலாக்கத்துறை போன்றவற்றின் சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க, மூன்று வேளாண் சட்டங்களையும் ஆதரித்து, இன்றைக்குத் தமிழ்நாடு மட்டுமின்றி நாடே கொந்தளித்துப் போராட அடிப்படைக் காரணமாக இருந்து விட்டு தற்போது மாற்றிப் பேசி வருகிறார்.
அதற்குத் தக்க தண்டனையை, தேர்தல் நேரத்தில் தங்களின் வாக்குரிமையின் மூலம் தமிழக விவசாயிகள் நிச்சயம் கொடுப்பார்கள். அதிலிருந்து அதிமுக தப்ப முடியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.