சென்னை: தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 26 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கட்டண உயர்வை திரும்ப பெறவில்லை என்றால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கீழ் இயங்கி வருகிறது. 1,44,634 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 892 சுங்க சாவடிகள் செயல்பட்டு வருகிறது. மேலும், சுங்க சாவடிகளை தேசிய நெடுஞ்சாலை அமைச்சகம் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்படைத்து கட்டனம் வசூலிக்கு அனுமதி அளித்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் 6,606 கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 54 சுங்கசாவடிகள் இயங்கி வருகிறது. இதில் ஆண்டொன்றுக்கு 5% முதல் 10% வரை கட்டணம் உயர்த்தி வசூலிக்கபடுகிறது. ‘மத்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய’ ஒப்பந்தபடி, 1992 ம் ஆண்டு போடப்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடிகளுக்கு ஏப்ரல் மாதமும், 2008 ம் ஆண்டுக்கு பிறகு போடப்பட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கசாவடிகளுக்கு செப்டம்பர் மாதத்திலும் கட்டணம் உயர்த்தபடும்.
அதன்படி தமிழ்நாட்டில் இரண்டு கட்டங்களாக சுங்கக்கட்டணம் உயர்த்தி வசூலிக்கப்படுகிறது. அதில் ஏப்ரல் மாதம் 28 சுங்கச்சாவடிகளுக்கும் செப்டம்பர் மாதம் மீதமுள்ள 26 சுங்கச் சாவடிகளுக்கும் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்திக்கொள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அனுமதித்துள்ளது.
மேலும், நடப்பு நிதியாட்டில் 5% முதல் 10% வரையிலான கட்டண உயர்வுக்கு நெடுஞ்சாலை ஆணையம் மத்திய அரசுக்கு பரிந்துரையளித்திருந்தது. அதன் அடிப்படையில், கடந்த ஏப்ரல் மாதம் 28 சுங்கசாவடிகளில் கட்டணம் உயர்த்தபட்டது. இந்நிலையில், தமிழகத்தில் மீதமுள்ள 26 சுங்கசாவடிகளில் கட்டண உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
மதுரை, தூத்துக்குடி, சேலம், திருச்சி, திண்டுக்கல், மேட்டுபட்டி, உளுந்தூர்பேட்டை உள்பட 26 சுங்கசாவடிகளில் நள்ளிரவு 12 மணி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதில் கார், வேன் போன்ற நான்கு சக்கர வாகனங்களுக்கு பழைய கட்டணமாக ரூ 85 லிருந்து 5 ரூபாய் உயர்த்தி ரூ 90 ஆகவும், இரண்டு முறை சென்று வர 125 ரூபாயாலிருந்து 10 ரூபாய் உயர்த்தி 135 ரூபாயாகவும் வசூலிக்கப்படும். மேலும் மாதாந்திர கட்டணம் ரூ 235 லிருந்து ரூ 1,325 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் மதுரை - தூத்துக்குடி சாலையை பயன்படுத்துவதற்கான பயனாளி கட்டணங்களும் மாற்றியமைக்கபட்டுள்ளது. மதுரை மாவட்டம் எலியார்பாத்தி சுங்கசாவடி மற்றும் தூத்துக்குடி மாவட்டம் புதுர்பாண்டியாபுரம் ஆகிய சுங்க சாவடிகளிலும் கட்டண உயர்வு அமல்படுத்தபட்டுள்ளது. அதன் அடிப்படையில், கார், வேன் போன்ற வாகனங்களுக்கு ஒரு முறை சென்று வர ரூ.85 லிருந்து ரூ.90 ஆகவும் இரண்டு முறை சென்று வர ரூ.125 லிருந்து ரூ.135 ஆகவும் உயர்த்தபட்டுள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ.2,505 லிருந்து ரூ.2,740 ஆகவும் உயர்த்தபட்டுள்ளது.
மேலும், எடை குறைவாக சரக்குகளை ஏற்றி செல்லும் இலகு ரக வாகனங்களுக்கு ஒரு முறை சென்று வர ரூ.145 லிருந்து ரூ.160 ஆகவும், இருமுறை சென்று வர ரூ.220 லிருந்து ரூ.240 ஆகவும், மாதாந்திர கட்டணம் ரூ.4,385 லிருந்து ரூ.4800 ஆகவும் உயர்த்தபட்டுள்ளது. அதே போல் அதிக எடையை ஏற்றி செல்லும் கனரக வாகனங்களுக்கு ஒருமுறை சென்று வர ரூ.290 லிருந்து ரூ.320 ஆகவும், இரண்டு முறை சென்று வர ரூ.440 லிருந்து ரூ.480 ஆகவும் உயர்த்தபட்டுள்ளது.
மாதாந்திர கட்டணத்தை பொருத்தவரை ரூ.8,770ஆக இருந்ததை ரூ.9595 ஆக உயர்த்தி நிர்ணயம் செய்யபட்டுள்ளது. அதே போல் இரண்டு அச்சு மிக கனரக வாகனங்களுக்கு ஒரு முறை சென்று வர ரூ.470 லிருந்து ரூ.515 ஆக உயர்த்தபட்டுள்ளது. இரண்டு முறை சென்று வர ரூ.705 லிருந்து ரூ.770 ஆக உயர்த்தபட்டுள்ளது. அதே போல் மாதாந்திர கட்டணம் ரூ.14,095 லிருந்து ரூ.15,420 ஆக உயர்த்தபட்டுள்ளது.
அனைத்து வகை வாகனங்களுக்கும் பணம் செலுத்திய நேரத்திலிருந்து 24 மணி நேரத்திற்குள் செய்யப்படும் பல முறை பயணங்களில் பாஸ்டேக் பயனாளிகளுக்கு மட்டும் இந்த கட்டண சலுகை அமலாகும். சுங்கக்கட்டணம் வசூல் மையத்திலிருந்து 10 கி.மீ. சுற்று வட்டாரத்திலுள்ள வணிக உபயோகம் இல்லாத கார், பயணிகள் வேன் அல்லது ஜீப் மாதாந்திர நுழைவுச்சீட்டு ரூ.150 மற்றும் சுங்கக்கட்டணம் வசூல் மையத்திலிருந்து 10 கி.மீ.க்கு மேற்பட்ட 20 கிலோ மீட்டருக்கு உள்ளாக சுற்று வட்டாத்திலுள்ள கார், பயணிகள் வேன், ஜீப்களுக்கு மாதாந்திர நுழைவுச் சீட்டு ரூ.300 வசூலிக்கப்பட உள்ளது.
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கசாவடி கட்டண உயர்வு குறித்து லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் யூவராஜ் கூறியதாவது, “சுங்கவரி கட்டண உயர்வு தொடர்பாக எங்களது சங்கத்தின் சார்பில் தொடர் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும், தமிழகத்தில் செயல்பட்டு வரக்கூடிய 54 சுங்குசாவடிகளில் 32 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் இல்லை என ஏற்கனவே அறிவிக்கபட்டுள்ளது”.
மேலும், “சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை, ஆண்டுக்கு ஒரு முறை நாங்கள் கட்டுவதற்கு தயாராக இருக்கிறோம். சுங்க வரி கட்டணம் உயர்வு என்பது வாகனங்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுடைய அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரக்கூடிய சூழல் ஏற்படலாம்” என அவர் கூறினார். வெளிமாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து தான் பெருநகரங்களுக்கு பொருட்கள் வருகின்றன. பெட்ரோல் டீசல் விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலையும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் சுங்கவரி கட்டணம் உயர்வும் காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரக்கூடிய நிலை ஏற்படலாம்” என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க: Commercial LPG: வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு.. சென்னையில் கேஸ் விலை என்ன?