சென்னை பெருநகர மாநகராட்சிப் பணியாளர்கள், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான (பெண்களுக்கான அடிப்படை வருமானத் திட்டம்) டோக்கன்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களை நகரின் 15 மண்டலங்களில் இன்று விநியோகிக்கத் தொடங்கினர்.
இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியான குடும்பத் தலைவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும், இந்த திட்டம் ஏற்கனவே, அரசால் அறிவித்தபடி செப்டம்பர் 15, 2023ஆம் தேதி அன்று தொடங்கப்பட உள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சிப் பணியாளர்கள் பல்வேறு குடியிருப்புப் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குச் சென்று நலத் திட்டத்திற்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான நடைமுறைகளை விளக்கினர். மேலும் முதற்கட்டமாக, சென்னையில் உள்ள 200 வார்டுகளில் 50 விழுக்காடு வார்டுகளில் உள்ள ரேஷன் கார்டுகள் உள்ளவர்களுக்கு, டோக்கன் மற்றும் விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்படும் எனவும்; வரும் திங்கட்கிழமை அவர்களை முகாமுக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், திட்டம் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், 1913 என்ற உதவி எண்ணை அழைக்குமாறு சென்னைவாசிகளிடம் கேட்டுக்கொண்டனர். பிறகு 1913க்கு வரும் அழைப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தால், அழைப்பு மையத்தில் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்தத் திட்டத்தில் குடியிருப்போர் விண்ணப்பிக்க வசதியாக, நகரின் 15 மண்டலங்களிலும் கட்டுப்பாட்டு அறைகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்கான முகாம் சென்னை நகரத்தில் இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்று சென்னை பெருநகர மாநகராட்சி அறிவித்துள்ளது.
முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் வரும் 24ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 4ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டாம் கட்ட முகாம், அடுத்த மாதம் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தது. மேலும் இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
மேலும் இந்த திட்டத்தைச் செயல்படுத்திட 2023-24ஆம் ஆண்டுக்கான நிதியாண்டில் 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தைச் செப்டம்பர் 15ஆம் தேதி ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதையும் படிங்க: ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்குவோம்; திண்டுக்கல் சீனிவாசன் உளறல் - அதிமுகவினர் கதறல்