சென்னை: சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழ்நாடு - வட இலங்கை கடலோர பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தென்தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள், டெல்டா, கடலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஏப். 11) ஓரிரு இடங்களில் கனமுதல் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மழைக்கு வாய்ப்பு: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஏப். 12, 13, 14 ஆகிய தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும்.
தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் கேரள கடலோரப் பகுதிகளில் இன்று (ஏப்.11) பலத்த காற்று மணிக்கு 40-50 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேலும், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: கோடையைக் குளிர்விக்க வரப்போகிறது மழை!