சென்னை: தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று (டிச.30) காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே பகுதிகளில் நிலவக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், இன்று (டிச.30) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதைத் தொடர்ந்து, நாளை (டிச.31) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தொடர்ந்து, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
அதன் பின்னர் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஜனவரி 1ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
வடகிழக்கு பருவமழை: தமிழகத்தில் அக்டோபர் 1ஆம் தேதி முதல் டிசம்பர் 30ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவான மழை அளவு 458.7 மி.மீ ஆகும். ஆனால், இந்த காலகட்டத்தில் இயல்பான மழை அளவு 441.4 மி.மீ ஆகும். இந்நிலையில் இம்முறை இயல்பை விட 4 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது.
தாமிரபரணி நீர் வரத்து அதிகரிப்பு-நெல்லை மலைகளில் மீண்டும் தொடர் மழை
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பதிவான மழை அளவு: ஊத்து (திருநெல்வேலி) 22 செ.மீ மழையும், நாலுமுக்கு (திருநெல்வேலி) 21செ.மீ மழையும், காக்காச்சி (திருநெல்வேலி) 20 செ.மீ மழையும், மாஞ்சோலை (திருநெல்வேலி) 10 செ.மீ மழையும், பாபநாசம் (திருநெல்வேலி) 3 செ.மீ மழையும், புலிப்பட்டி (மதுரை), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), குன்னூர் (நீலகிரி), குன்னூர் PTO (நீலகிரி), பெரியபட்டி (மதுரை) ஆகிய பகுதிகளில் தலா 1 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள்: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: நாளை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதைத் தொடர்ந்து, ஜனவரி 1ஆம் தேதி குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இதனால், மீனவர்கள் யாரும் இந்த பகுதிக்குச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஈரோட்டில் விஜயகாந்த் மறைவையொட்டி மொட்டை அடித்து அஞ்சலி செலுத்திய ரசிகர்கள்..!