பொறியியல் படிப்பு மீதான ஆர்வம் கடந்த சில ஆண்டுகளாகவே மாணவர்களிடையே குறைந்து வந்தது. அரசு ஒதுக்கீட்டில் சுமார் ஒரு லட்சத்து 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருந்தாலும், ஒரு லட்சத்திற்கும் அதிகமான இடங்கள் காலியாக இருந்தன.
கடந்தாண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கு ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 116 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 80 ஆயிரம் பேர் கல்லூரிகளில் சேர்ந்தனர்.
இந்த ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பப் பதிவு நடைபெற்று வருகிறது. ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை, ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 33 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம்.
இவர்களில் ஒரு லட்சத்து 28ஆயிரத்து 118 பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி உள்ளனர். இவர்கள் பொறியியல் படிப்பில் சேர்வதற்கும் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கும் இன்றே கடைசி நாள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் தங்களின் சான்றிதழ்களை ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்வதற்குத் தேவையான வசதிகளை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.